திருப்பத்தூர்: காவல் உதவி ஆய்வாளரும், இருசக்கர வாகன ஓட்டியும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்காயம் பேருந்து நிலையம் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, அந்த நபர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
உடனடியாக பின்னால் துரத்தி சென்ற காவல் உதவி ஆய்வாளர், அவரை பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றார். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது வாகன ஓட்டியை காவல் உதவி ஆய்வாளர் பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்தார். இதில் ஆத்திரமடைந்த இருசக்கர வாகன ஓட்டியான காவலூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனும் காவலரை திருப்பி தாக்கினார்.
உடனடியாக மணிகண்டனை இன்னும் கொடூரமாக காவல் உதவி ஆய்வாளர் தாக்கி கீழே சாய்த்தார். இது தொடர்பான காணொலியை பொதுமக்கள் படம்பிடித்து இணையத்தில் உலாவ விட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வாகன ஓட்டி மணிகண்டனை கைதுசெய்த காவல் துறையினர், தாக்குதலில் காயமடைந்த அவரை ஆலங்காயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய ஆவின் உதவி பொது மேலாளர் - கையும் களவுமாக சிக்கியது எப்படி?