கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளைஞர். இவருக்கும், சுமார் 35 வயதுடைய பெண் ஒருவருக்கும் கடந்தாண்டு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் விருதம்பட்டு ஒட்டைப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த மகாலட்சுமி என்று தன்னை அந்த பெண் அறிமுகம் செய்துகொண்டுள்ளார். மேலும், தான் ஒரு அனாதை என்றும், உறவினர்கள் யாரும் கிடையாது என்றும் அந்த பெண் கூறியதாக தெரிகிறது.
இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில் ஒரு நாள் திடீரென அந்த பெண் இளைஞரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். உடனே அந்த இளைஞர் தனது பெற்றோரிடம் இது தொடர்பாக கூறி திருமணத்திற்குச் சம்மதம் வாங்கியுள்ளார். அதன்படி இளைஞருக்கும் - மகாலட்சுமிக்கும் கடந்த 23.1.2022 அன்று பண்ருட்டி அடுத்த திருவதிகையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
அதன்பிறகு 4 மாதம் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து உள்ளனர். பிறகு தான் கர்ப்பமாக இருப்பதாக இளைஞரிடம் கூறியுள்ளார் அந்த பெண். உடனடியாக மகிழ்ச்சி அடைந்த இளைஞர் குடும்பத்தினர் ஐந்தாவது மாத சீர்வரிசைகள் செய்து அவரை மகாலட்சுமி குஷிப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் திடீரென ஒரு நாள், மகாலட்சுமி தனது பள்ளி தோழிக்கு உடல் நிலை சரியில்லை எனவும், சென்னைக்குச் சென்று பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார். சென்னை செல்லும்போது மகாலட்சுமி இளைஞரின் வீட்டிலிருந்த வீட்டில் இருந்த 6½ பவுன் நகை, ரூ.83 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்றவர், மீண்டும் வரவில்லை.
இளைஞர் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது சரியாக பதில் கூறாமல் இணைப்பை துண்டித்து விட்டார். அதன் பிறகு தொலைப்பேசியில் சரியாகப் பேசாத நிலையில் தனக்கு குழந்தை பிறந்து விட்டதாக மகாலட்சுமி தகவல்களை இளைஞரிடம் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையுடன் ஒரு புகைப்படத்தையும் அவரிடம் பகிர்ந்து உள்ளார். அதன் பிறகு குழந்தை இறந்து விட்டதாக தகவல்களை தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் நம்பிய இளைஞர் அவர் கொடுத்த முகவரியில் விசாரித்தபோது, அது தவறான முகவரி என்பதும், அவர் தன்னை போன்று பலரை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதும் தெரியவந்தது.
அந்த வகையில், பண்ருட்டி இளைஞரை மகாலட்சுமி 9-வதாக திருமணம் செய்துவிட்டு நகை, பணத்துடன் ஓடிவிட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் பத்தாவது ஆக ஒரு நபரையும் அவர் திருமணம் செய்து விட்டதாக தெரிய வருகிறது. இதனை அறிந்த இளைஞர் தற்போது பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனுவை கொடுத்துள்ளார். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் தான் அனாதை என்று கூறிய பலரையும் திருமணம் செய்து உள்ளதாகவும் பெரிய பணக்காரர்களை இவர் ஏமாற்றுவது கிடையாது என்றும் விவசாயி மற்றும் கூலித் தொழிலாளிகளைப் பிடித்து அவர்களிடம் இருக்கும் நகை மற்றும் பணத்துடனே இவர் ஓட்டம் பிடித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து திருமண நாயகி மகாலட்சுமியை தற்போது போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். சலிக்காமல் பத்து திருமணங்கள் செய்த மகாலட்சுமி பிடிபட்டால் தான் அவர் மேலும் என்னென்ன செய்துள்ளார் என்ற விவரங்கள் தெரியவரும் என்பதால் போலீசார் தனி படைகள் அமைத்துத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹவாலா பணத்துக்கு லஞ்சம் பெற்ற ரயில்வே போலீசார் சஸ்பெண்ட்!