வேலூர்: காட்பாடி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவர் 2010ஆம் ஆண்டுமுதல் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துவந்தார்.
இவர் பணியில் சேரும்போது அனுபவச் சான்றிதழ் பல்கலைக்கழகத்தின் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது. அப்போது, பன்னீர்செல்வம் 1999ஆம் ஆண்டு முதல் 2004 வரை எ.வி.எம்.எம். கல்லூரியில் பணிபுரிந்ததாகவும், தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2004 - 2006ஆம் ஆண்டுவரை பணிபுரிந்ததாகவும் சான்றிதழ் வழங்கியுள்ளார்.
வழக்குப்பதிவும், பணிநீக்கமும்
இந்தச் சான்றிதழ்கள் போலியாகத் தயார் செய்யப்பட்டவைபோல் உள்ளதாகப் பல்கலைக்கழகப் பதிவாளருக்குச் சந்தேகம் எழுந்தது. அதைத் தொடர்ந்து அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க பல்கலைக்கழகப் பதிவாளர் சையது சஃபி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் சமர்ப்பித்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியாக அவரே தயார் செய்தவை என்பது தெரியவந்தது. பின்னர் 2019ஆம் ஆண்டு பல்கலைக்கழக நிர்வாகம் அவரைப் பணியிடை நீக்கம்செய்தது. இது குறித்து, வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதிவாளர் சையது சஃபி இது தொடர்பாகப் புகார் அளித்திருந்தார்.
புகாரின் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதாவுக்கு காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைசெய்தார். இது குறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் பன்னீர்செல்வம் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
சிறையில் அடைப்பு
அதைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் தலைமறைவாக இருந்தார். மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் பன்னீர்செல்வத்தை வலைவீசி தேடிவந்த நிலையில் காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டில் இருந்த அவரை மடக்கிப் பிடித்தனர்.
அதைத் தொடர்ந்து அவரைக் கைதுசெய்த குற்றப்பிரிவு காவல் துறையினர் காட்பாடி நீதிமன்றத்தில் முன்னிறுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசில் பல்லி; கேள்வி கேட்டால் மரணம்... திமுக அரசின் ஜனநாயகப் படுகொலை!'