சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் டேவிட்(50). இவர் மீனவர் ஆவார். இவர் வீட்டில் அடுத்த மாதம் திருமண நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் நீலாங்கரை பகுதியில் இருந்து உறவினர்கள் பலர் இவருடைய வீட்டிற்கு வந்துள்ளனர்.
இன்று காலை அருகில் இருந்த சர்ச்சிற்கு சென்று விட்டு மதியம் 2 மணி அளவில் வீட்டில் இருந்த தன்னுடைய மகன் அலெக்ஸ்(12) மற்றும் உறவினர்களின் குழந்தைகளான ருத்ரா(13), விக்கி(10) ஆகியோர் உட்பட 7 சிறுவர்களை வீட்டிற்கு அருகே உள்ள கடற்கரையில் விளையாடுவதற்காக அழைத்து சென்றுள்ளார்.
அப்போது கடல் அலை அதிகமாக இருந்ததால் யாரும் எதிர்பாராத வகையில் கடலில் விளையாடிய சிறுவர்கள் கடல் அலையில் சிக்கினா். உடனடியாக சுதாரித்துக் கொண்ட டேவிட் தன்னுடைய மகள் ரூப சந்தா(16) மற்றும் இஸ்ரவேல்(15), ஜோஸ்(14), பெஞ்சமின்(12) ஆகிய 4 சிறுவர்களை மீட்டு கரையில் இருக்க வைத்துவிட்டு மீதி இருந்த சிறுவர்களை மீட்க முயன்றார். அதற்குள் அலெக்ஸ், ருத்ரா, விக்கி ஆகியோர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
உடனடியாக அப்பகுதியில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக எண்ணூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அலெக்ஸ் மற்றும் ருத்ரா ஆகிய இருவரின் உடல் சிறிது நேரத்தில் கரையொதுங்கியது. மேலும் விக்கி என்ற சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு துறையினரும் மீனவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு எண்ணூர் காவல்துறையினர் விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கரை ஒதுங்கி மீட்கப்பட்ட அலெக்ஸ் மற்றும் ருத்ரா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக-பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்- அண்ணாமலை