தூத்துக்குடி: கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏ.கே.எஸ் (AKS) தியேட்டர் ரோடு பகுதி, போஸ் நகரைச் சேர்ந்தவர் கணேசன் (எ) குடஞ்சான் கணேசன்(27).
இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டிப் பணம் பறித்த வழக்கில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் குடஞ்சான் கணேசனை கைது செய்தனர்.
விசாரணையில், கணேசன் மீது இதுபோன்ற தொடர் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதி கேட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவின் பேரில் கணேசனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கணேசன்(எ)குடஞ்சான் கணேசன் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட 19 பிரிவுகளில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.