ஹைதராபாத் (தெலங்கானா): மருத்துவமனைகளில் 9 மாத கர்ப்பிணிக்கு இடமளிக்காததால் அவசர ஊர்தியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மல்லாப்பூரைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணியான பவானி, உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அவருக்கு கரோனா தொற்று பாதித்திருக்கும் என்ற அச்சத்தில் மருத்துவமனை, கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்துள்ளனர்.
இதனால் அவசர ஊர்தியிலேயே அல்லப்பட்ட பவானியை, பக்கததில் இருந்த மருத்துவமனைகளுக்கு அவரின் உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கும் அதே நிலை தொடர்ந்தது. அவரை அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகங்கள் மறுப்பு தெரிவித்தது.
எந்த கதவைத் தட்டினாலும், பலனளிக்காமல் திணறிய பவானி குடும்பத்தினருக்கு, அங்கிருந்தவர்கள் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி வலியுறுத்தியுள்ளனர். உடனடியாக பவானி மேற்கூறப்பட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படாமல் கர்ப்பிணி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாவனியின் துயரம் அதோடு நின்றுவிடவில்லை, அவரது தகனம் வரையில் தொடர்ந்திருக்கிறது.
வயிற்றில் குழந்தையுடன் பவானியின் உடலை தகனம் செய்ய மயான நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிசுவை வெளியே எடுத்து, அதற்கும் சடங்கு சம்பிரதாயங்கள் செய்து தனித்தனியே தகனம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மயானத்தில் தகனம் செய்ய அனுமதிப்போம் என்று கூறப்பட்டது.
தாயையும் சேயையும் பிரிக்க மீண்டும் மருத்துவமனைகளின் கதவுகள் தட்டப்பட்டன. இந்த முறையும் பலனளிக்கவில்லை. முடிவில் அங்கிருந்த ஒரு சிறிய மருத்துவமனையில் கர்பிணியின் வயிற்றில் இருந்த சிசு இறந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து தகனமும் நடந்தது.
இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் சுவேதா மோகந்தி, உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.