திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோபி. இவர் சென்னை ஆலந்தூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து, ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த விவாகரத்து ஆன மகேஸ்வரி என்ற பெண்ணுடன் கோபிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி மகேஸ்வரியை கோபி திருமணம் செய்துள்ளார். பிறகு மேல்நல்லாத்தூர் கிராமத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு (மார்ச் 20) கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவன் கோபி மனைவி மகேஸ்வரியை கழுத்தறுத்து கொலை செய்து, மணவாள நகர் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். பிறகு அவரை மணவாள நகர் காவல் துறையினர் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான காவல் துறையினர் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் மேல்நல்லாத்தூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...கஞ்சா போதையில் அதிகரிக்கும் குற்றங்கள்: திணறும் காவல் துறை!