விழுப்புரம்: ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த துரையரசன் என்ற விவசாயி, தனது மனைவி தேன்மொழி (45), மகள் கலைமதி (18) ஆகியோருடன் வசித்து வருகிறார். இவருக்கு அதே கிராமத்தில் நான்கு ஏக்கர் விவசாய நிலம் சொந்தமாக உள்ளது. அவற்றில் விவசாயம் செய்து வருகிறார்.
இச்சூழலில், இன்று (மார்ச்.25) காலை வழக்கம் போல விவசாயப் பணிகளுக்கு சென்ற துரையரசன், மாலை வரை வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தபோது, விவசாய நிலத்திலுள்ள மோட்டார் கொட்டகையில் துரையரசன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் இது குறித்து அவரது உறவினர்கள் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் துறையினர் இரும்புக் கம்பி, கடப்பாரை ஆகியவற்றைக் கொண்டு தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த விவசாயியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மோப்ப நாயை வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், விசாரணையை துரிதப்படுத்தியுள்ள காவல் துறையினர் கொலையாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.