சென்னை: கடந்த 11 ஆம் தேதி வட சென்னை பகுதியில் பல்வேறு தெருக்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு ஒட்டப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார், இந்த சுவரொட்டியை ஒட்டிய பிலிப்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்துள்ளார்.
இதுபோன்று முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார். தொடர்ந்து எச்சரித்தும் சுவரொட்டிகளை ஒட்டியதால் எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர் என்பவரும் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து போஸ்டர் ஒட்டிய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிலிப்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். போஸ்டர் ஒட்டும் வேலையை செய்யும் பிலிப்ராஜ் மீது கடந்த 2000 ஆண்டு கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. பிலிப்ராஜிடம் இருந்து ஆயிரக்கணக்கான போஸ்டர்கள் மற்றும் இருசக்கர வாகனம், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த போஸ்டரை யார் ஒட்ட சொன்னார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணை மேற்கொண்டதில் இந்து ஜனநாயக முன்னணியின் சென்னை மாநகரச் செயலாளர் சத்தியநாதன் என்பவர் போஸ்டர்களை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சத்யநாதனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சத்தியநாதன் மீது இரண்டு வழக்குகள் சென்னை காவல் நிலையங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்தது தொடர்பாக கேரள கெஸ்ட் ஹவுஸ் தாக்கியது தொடர்பாகவும், இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரது கைதை கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது தொடர்பாகவும் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சத்தியநாதனிடம் விசாரணை மேற்கொண்டதில் பறையர் பேரியக்க தலைவர் சிவகுருநாதன் என்பவர் போஸ்டர்களை சென்னையில் ஒட்ட கொடுத்தது தெரியவந்துள்ளது. போஸ்டரை ஒட்ட கொடுத்த சிவகுருநாதனையும் போலீசார் கைது செய்தனர். இவர் மீது முக்கூட்டு மலையில் ஜாதி கலவரம் விவகாரம் தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சரை அவதூறாக சித்தரித்த போஸ்டரை சிவகுருநாதன் சிவகாசியில் தனியார் அச்சகத்தில் 5,000 போஸ்டர்களை அடித்து கொரியர் மூலம் சென்னை கொண்டு வந்து, வழக்கறிஞர்கள் இருவர் மூலம் சத்தியநாதன் மற்றும் பிலிப்ராஜ் வைத்து சென்னையில் சுவரொட்டிகளை ஒட்டியது விசாரணையில் தெரியவந்தது.
இதுபோன்று முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு கூறிய நபர் யார் என கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் என்பவர் கூறியதன் மூலம் செய்தது விசாரணையில் அம்பலமானது.
குறிப்பாக ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பற்றி கார்ட்டூன் சித்திரம் வெளியானது போல், கிருஷ்ணகுமார் முருகன் தமிழக முதல்வரையும் பற்றி அவதூறு பரப்பும் வகையில் வாசகம் மற்றும் கார்ட்டூன்களை சித்தரித்து சிவகுருநாதனுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதற்காக 35 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சிவகுருநாதனுக்கு கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே சிவகுருநாதன், சத்தியநாதன், பிலிப்ஸ் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த பாஜக ஆதரவாளரும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளருமான கிருஷ்ணகுமார் முருகனை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
கிருஷ்ணகுமார் முருகனை அடையாறில் அவர் நடத்திவரும் அரசியல் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். தமிழக முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டப்பட்ட விவகாரத்தில் இன்னும் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.