தூத்துக்குடி: ஜார்ஜ் ரோடு, கீதாஜீவன் நகர், வாடி தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் (44), மீன் வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் குடும்பத் தகராறில் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தூத்துக்குடி சிதம்பர நகர பஸ் ஸ்டாப் அருகில் உள்ள இசக்கி அம்மன் கோவில் நடைமேடையில் இரவு படுத்து தூங்குவாராம்.
நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அங்கு வந்த 3 பேர் அவரிடம் தகராறு செய்து, அவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சார்லஸ் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 3 மணியளவில் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கெங்கநாத பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் சின்னமுத்து (39), எட்டையாபுரம் அருகே உள்ள துரைசாமிபுரத்தை சேர்ந்த அட்சயா மகன் குருசாமி (38), மற்றும் ஒரு சிறுவன் சேர்ந்து குடிபோதையில் சார்லஸை இரும்பு கம்பியால் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: டெண்டர் எடுப்பதில் தகராறு; ஒன்றிய அலுவலகத்தில் திமுக - அதிமுக மோதல்..