சென்னை: சென்னை அருகே காரனோடை சுங்கச்சாவடியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இரண்டு கார்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் இருந்த கோணி மூட்டைகளில் 172 பாக்கெட்டுகளில் 349 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்து கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்சியில் 7 பேர் கஞ்சாவை கொண்டு செல்வதற்காக பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருச்சி மண்டல மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இவர்கள் 10 பேரும் மதுரை, தேனியை சேர்ந்த இரண்டு மிகப்பெரிய கஞ்சா கும்பலை சேர்ந்த விற்பனையாளர்கள் மற்றும் பைனான்சியர் என தெரியவந்தது.
மேலும் இவர்கள் மொத்த கஞ்சாவையும் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து, அதனை கடல் வழியாக இலங்கைக்கும், தரை வழியாக தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.