வேலூர் மாவட்டம், மேல்மொனவூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் தனது மூன்று குழந்தைகளுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
பின்னர் அந்தப் பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறுகையில், " என்னுடைய கணவர் குமரன் கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். தற்போது திருநங்கைகளுடன் சேர்ந்து அவரும் திருநங்கையாக மாறி, குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மேலும் எங்களின் மூன்று குழந்தைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறுகிறார்" என்றார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயந்தி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும்; திருநங்கைகளின் பிடியில் இருக்கும் தன் கணவர் குமரனை மீட்டு மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டுமென்றும் புகார் தெரிவித்தார். பின்னர் காவல் துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: தீட்டை காரணம் காட்டி வீட்டிலிருந்து தனி அறைக்கு ஒதுக்கப்படும் பெண்கள்