வேலூர்: குடியாத்தம் பகுதியை அடுத்த உள்ளி வாத்தியார்பட்டியைச் சேர்ந்தவர் ஶ்ரீகாந்த். கணினி பட்டதாரியான ஸ்ரீதர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னை சினிமா நிறுவனம் ஒன்றில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். கோடம்பாக்கத்தில் தனது கனவுகளைத் துரத்திக்கொண்டிருந்த ஸ்ரீகாந்தின் வாழ்க்கையில் இடியென வந்து விழுந்தது அந்தச் செய்தி.
2017ஆம் ஆண்டு திடீரென நிகழ்ந்த தனது அண்ணனின் இழப்பு அவரை ஒரு இறுக்கமான சூழலுக்குத் தள்ளியது. அதுவரை, தனது கனவுகளோடு சேர்ந்து குடும்பத்தின் பாரத்தையும் சுமந்த அண்ணனின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய இடத்திற்கு ஸ்ரீகாந்த் தள்ளப்பட்டார்.
சொந்த ஊருக்குத் திரும்பிய ஸ்ரீகாந்த், குடும்பத்தின் வேளாண்மைப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள தொடங்கினார். வேளாண்மைப் பணிகளில் கரைந்த ஸ்ரீகாந்தின் மனதை விழித்துக்கொள்ள செய்தது, மறைந்த தனது அண்ணனின் முதலாமாண்டு நினைவுநாள். தனது கனவுகளைச் சுமந்த அண்ணனுக்கு நாம் என்ன திருப்பிச் செய்யப்போகிறோம் எனச் சிந்தித்தவரின் மனத்தில் உதித்தது 'அண்ணனின் பெயரில் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, சிறு காடாக்கி பராமரிப்பது'.
மரங்களை நடுவதோடு மட்டுமில்லாமல், வாத்தியார்பட்டி மக்களுக்கு மரத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தினார். ஸ்ரீகாந்தின் இந்த முயற்சி பாலாற்றின் கரையோரத்தில் பசுமைப் பயணத்தின் ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
தனது அண்ணனின் ஆசையை, தனது லட்சியமாக ஆக்கிக்கொண்ட ஸ்ரீகாந்த், பசுமைப் பாதையில் தற்போது பயணித்துவருகிறார்.
மியாவாக்கி என்னும் குறுங்காடு அமைக்கும் பணிகள் குறித்து நம்மிடம் பகிர்ந்த வனத்தோழன் ஶ்ரீகாந்த், "வேளாண்மை குடும்பத்தைச் சார்ந்தவன் நான். எனது அண்ணன்தான் என்னைப் படிக்கவைத்தார். அவர் 2017ஆம் ஆண்டில் நடந்த எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்தபோது, அவர் விட்டுச் சென்ற வேளாண்மையை நான் பார்க்கத் தொடங்கினேன்.
அண்ணனின் நினைவாக அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாளில், ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கத் தொடங்கினேன். இது குறித்து கேள்விப்பட்ட குடியாத்தம் பிடிஓ அலுவலர், என்னை அழைத்து நான் செய்துவரும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை சந்தித்து பேச ஏற்பாடு செய்துதந்தார்.
அவரது ஏற்பாட்டில் வேலூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, என்னுடைய இந்தக் குறுங்காடு அமைக்கும் திட்டத்தை விவரித்தேன். எனது திட்டத்தைப் பரிசீலித்த அவர், அதைச் செயல்படுத்த குடியாத்தம் ஆர்டிஓ அலுவலருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, குறுங்காடு அமைக்கும் திட்டத்திற்காக எனது சொந்த கிராமத்தை அடுத்த ஆற்றுப் புறம்போக்கில் 25 ஏக்கர் நிலத்தை அலுவலர்கள் ஒதுக்கித் தந்தனர்.
ஒரு காலத்தில் காடாக இருந்த இப்பகுதி மணல் கொள்ளையர்களின் ஆக்கிரமிப்பிற்குள்ளாகி இருந்தது. அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரத் தேவையான முயற்சிகளைத் தொடங்கினேன்.
தனி ஒருவனாகத் தொடங்கிய இந்தப் பணிகளில் மற்றவர்களையும் இணைத்துக்கொள்ள விரும்பினேன். இவ்வளவு பெரிய பரப்பளவில் நான் ஒருவனாக வேலை செய்ய முடியாது என்பதால் பணிகளைப் பகிர்ந்துகொள்ள இன்னும் சிலர் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எனது எண்ணத்தை ஆட்சியரிடம் பகிர்ந்துகொண்டேன்.
இதனைத்தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்து, 30 பணியாளர்களை இப்பணிகளுக்காக வேலையில் அமர்த்தினார். இப்படியாகப் பல்வேறு உதவிகள் செய்து, ஆட்சியர் சண்முக சுந்தரம் பெரிதும் துணை நிற்கிறார்.
தற்போது அந்த இடத்தில் ஆலமரம், அரசமரம், புங்கை மரம், வேப்ப மரம், நாவல் மரம், நீர்மருது, கொடிக்காய் என 15 வகையான சுமார் 7,000 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நாவல் மரம் போன்ற பழ வகை மரங்களை நடுவதன் மூலமாக காட்டுயிர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும். நாம் பார்த்த பறவைகளையும், விலங்கினங்களையும் அடுத்த தலைமுறையினரும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நான் மரம் நடுவதைவிட அவற்றைப் பராமரிப்பதையே பெரிதாகப் பார்க்கிறேன். குறுகிய காலத்தில் இவை நன்றாக வளர வேண்டும் என்பதற்காக மரத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு சத்துகளை வழங்கும் வகையில் தேவையான உரம், நாறு, களி மண் போன்றவற்றைக் குழியில் மரத்தை நடும்போதே வைத்துவிடுகிறோம். வேகமாக வளர்ந்துவரும் மரக்கன்றுகள் இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் காடாக மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்றே ஊரிலுள்ள ஒவ்வொரு பஞ்சாயத்துகளில் காடுகளை உருவாக்கலாம். அந்தந்தப் பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலத்தை மீட்டெடுத்து நல்ல மரங்களைத் தேர்வுசெய்து நூறு நாள் வேலை திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஊரிலும் குறுங்காடு அமைக்கலாம்.
இவை அனைத்தையும் அரசு தான் செய்ய வேண்டும் என்பதைவிட நம்மால் என்ன முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். நம் ஊரை நாம்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மற்றவற்களை நம்பி இருப்பதை விட்டுவிட்டு என்னால் என்ன இன்று முடியும்? ஒரு பத்து செடி நட்டு பராமரித்தாலும், ஏன் ஒரு செடி நட்டாலுமே பெரிதுதான்" எனப் பெருமிதத்துடன் கூறுகிறார்.
அண்ணனின் நினைவாக காட்டை உருவாக்கிவரும் இந்தத் தம்பியைப் போல, அன்னை பூமிக்காக நாமும் மரங்களை நட்டால் எல்லாம் பசுமையாக மாறும்.