வேலூர்: பேர்ணாம்பட்டு, குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த காலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்நிலையில் அப்பகுதிகளில் நில அதிர்வை உணரும் கண்காணிப்புக் கருவியைப் பொருத்த புவியியலாளர்கள், புவி இயற்பியலாளர்கள் இன்று (ஜனவரி 4) ஆய்வுமேற்கொண்டனர்.
2021 நவம்பர் 29ஆம் தேதி, குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை, மீனூர் ஆகிய பகுதிகளில் 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டது. மேலும் கடந்தாண்டு டிசம்பர் 23ஆம் தேதி பேர்ணாம்பட்டு, தரைகாடு உள்ளிட்ட பகுதிகளிலும், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியிலும் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டது.
இதனையடுத்து நில அதிர்வுக்கான காரணம் குறித்து சென்னை, கொல்கத்தாவைச் சேர்ந்த புவியியலாளர்களும், விஐடியைச் சேர்ந்த பேரிடர் மேலாண்மை பேராசிரியரும் தொடர் ஆய்வு மேற்கொண்டுவந்தனர்.
நில அதிர்வைக் கண்காணிக்கும் கருவி பொருத்தி அதன் அதிர்வு குறித்து ஆய்வுசெய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இன்று நில அதிர்வைக் கண்காணித்து, பதிவு செய்யக்கூடிய சீஸ்மோகிராஃப் (Seismograph) கருவியைப் பொருத்துவதற்கான ஆய்வுகளை புவியியலாளர்கள், புவி இயற்பியலாளர்கள் மேற்கொண்டனர்.
தொடர்ந்து இக்கருவியைப் பொருத்த பேரணாம்பட்டு சுற்றியுள்ள பகுதியில் சரியான இடம் கிடைக்காததால் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திலேயே சீஸ்மோகிராஃப் கருவியை புவியியல் குழுவினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொருத்தினர்.
இந்த சீஸ்மோகிராஃப் கருவி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மூன்றும், ஆந்திர மாநிலம் சித்தூரில் இரண்டும் பொருத்தப்பட உள்ளன.
இக்கருவியை குடியிருப்புகளுக்கு மத்தியிலோ, சாலை ஓரங்களிலோ பொருத்த முடியாது. அமைதியான இடத்தில்தான் பொருத்த முடியும். இது பொருத்தப்பட்ட பிறகு இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அதைக் கணக்கிடுவார்கள்.
தற்போதைக்கு ஒரு மாதம் வரை இக்கண்காணிப்புப் பணி நடைபெற உள்ளது. நில அதிர்வு ஏற்பட்டால் அதன் தன்மை குறித்தும், நில அதிர்வுக்கான காரணம் குறித்தும் ஓரளவுக்கு கணிக்க முடியும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்தோ-பசுபிக்: ஜெய்சங்கர், பிளிங்டன் தொலைபேசி உரையாடல்