வேலூர்: காட்பாடியை அடுத்த தமிழ்நாடு - ஆந்திர எல்லை பகுதியான கிருஸ்டியான்பேட்டையில் வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடி, காவல் துறை சோதனைச்சாவடி ஆகியவை அமைந்துள்ளன.
இவ்வழியாக நேற்று (அக் 28) மாலை சேலத்தைச் சேர்ந்த ஐந்து நெல் அறுவை இயந்திரத்தை தெலுங்கானாவுக்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் சென்றுள்ளனர். அப்போது காட்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் ஒரு வண்டிக்கு 500 ரூபாயும், காவல் துறை சோதனைச்சாவடியில் ஒரு வண்டிக்கு 300 ரூபாயும் லஞ்சம் வசூலித்துள்ளனர்.
லஞ்சம் வாங்கிய அலுவலர்கள்
இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கராக வேலை செய்யும் சேகர் என்பவர் நெல் அறுக்கும் இயந்திர ஓட்டுநர்கள் ஐந்து பேரிடம் தலா 500 ரூபாய் லஞ்சம் பெறுகிறார்.
அதற்கடுத்து காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாஷ் என்பவர் அந்த ஐந்து வாகனங்களை விரட்டிச் சென்று தலா 300 ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார்.
இது குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாரிடம் கேட்டபோது, லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாஷை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் வைரல் வீடியோ