வேலூர்: மத்தியச் சிறையில் தண்டனை பெற்று வரும் கைதிகள் மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூவரும் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வேலூர் மத்தியச் சிறையின் கண்காணிப்பாளர் ருக்மனி பிரியதர்ஷினி கூறுகையில், தற்போது மூவரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் பாதுகாப்பிற்காக சிறைக் காவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என்றார்.
கரோனா தொற்று தொடங்கியது முதல், வேலூர் மத்தியச் சிறையில் உள்ள தண்டனை கைதிகள் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சென்றுவிட்டு சிறைக்கு திரும்பும் போது, சிறை வளாகத்தில் உள்ள பாஸ்டல் பள்ளியில் 15 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு கரோனா பரிசோதனையில் "தொற்று இல்லை" என்று வந்தால் மட்டுமே, மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.