திருச்சிராப்பள்ளி: வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
அந்த வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகத்தைத் தொடர்ந்து இன்று திருச்சி மாவட்ட பாமகவினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி கண்டோன்மெண்ட் பாரதிதாசன் சாலையிலுள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திருச்சி மாவட்ட செயலாளர் திலீப்குமார், துணைப் பொதுச்செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாமக தொடண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பாமக நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனைச் சந்தித்து மனு அளித்தனர்.