திருச்சி லலிதா நகைக்கடையில் இம்மாதம் இரண்டாம் தேதி ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தக் கொள்ளை வழக்கில் காவல் துறையினரால் தேடப்பட்டுவந்த சுரேஷ் 10ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க, திருச்சி மாநகர காவல் துறையினர் முடிவு செய்தனர்.
லலிதா ஜுவல்லரி கொள்ளையர்களைத் துரத்திப் பிடித்த போலீஸ்: வெளியான சிசிடிவி வீடியோ!
இதற்காக சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்கக் கேட்டு, காவல் துறையினர் திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்காகத் திருவண்ணாமலை சிறையிலிருந்த சுரேஷ் நேற்று திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து இன்று சுரேஷை நீதிமன்றத்தில் நீதிபதி திரிவேணி முன்னிலையில் காவல் துறையினர் முன்னிறுத்தினர்.
காவல் துறையினர் தரப்பில் 15 நாள்கள் காவலில் எடுத்து சுரேஷை விசாரிக்கக் கோரியிருந்த நிலையில், ஏழு நாள்கள் மட்டும் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதியளித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், இரண்டு நாள்களுக்கு ஒருமுறை, சுரேஷின் வழக்கறிஞர் அவரை சந்திக்க அனுமதியளித்துள்ளார்.