திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் மூலமாக, மேக தாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசு உடனடியாக அதனை நிறுத்த வேண்டும், திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால், அரியாறு, கோறையாறு ஆகியனவற்றில் நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.ப. சின்னதுரை தலைமையில் காய்கறிகள், நெல், பயிறு வகைகள், பூச்செடிகள், பழங்கள், பால் உள்ளிட்ட விவசாயப் பொருட்களுடன் திரண்ட விவசாயிகள் கர்நாடக மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மேகதாது விவகாரம் ஒற்றுமை தேவை: இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.ப. சின்னத்துரை, 'மேகதாதுவில் கர்நாடக அரசு கண்டிப்பாக அணையை கட்டியே தீருவோம் என்று உறுதியாக உள்ளது; இதனைத் தடுக்க எதிர்க்கட்சிகள் மட்டும் அல்ல, ஆளும் கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டு விவகாரத்தில் போராடியதுபோல் ஒன்று கூடி போராடி அழுத்தம் தர வேண்டும்.
நிபந்தனையற்ற நகை தள்ளுபடிக்கு கோரிக்கை: மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியில் ஐந்து சவரனுக்குகீழ் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெற்றால் அதை ரத்து செய்வோம் என்று அறிவித்திருந்தார். ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே, அதைச் செய்ய முடியும் என்று தற்போது மாற்றி கூறியுள்ளனர். எனவே, ஐந்து சவரனுக்குகீழ் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளின் கடனை எவ்வித நிபந்தனைகளும் இன்றி ரத்து செய்ய வேண்டும்' எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காவிரி டெல்டாவில் மீண்டும் வரும் ஹைட்ரோகார்பன் அபாயம் - முதலமைச்சர் தடுக்க கோரிக்கை!