திருச்சி: திருவெறும்பூர் அருகே மேலகல்கண்டார்கோட்டை பழைய அய்யனார் கோயில் தெருவைச்சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் வினோத்குமார்(36). இவர் தனியார் வங்கி ஊழியர் ஆவார். அதே பகுதியில், நாகம்மை வீதியின் விஸ்தரிப்பு பகுதியில் இருக்கும் சீனிவாசன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி(31). கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் இருவருக்குமிடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (ஜூலை 15) காலை புவனேஸ்வரி வீட்டிற்குச்சென்ற வினோத் குமார், அவரை கத்தியால் கழுத்து மற்றும் உடலில் குத்தியுள்ளார். இதனால், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கிடையே, வினோத் குமாரும் அருகில் இருந்த தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ், காவல் ஆய்வாளர் தனசேகர் மற்றும் மாநகர துணை ஆணையர் ஸ்ரீதேவி நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவினர் ஆகியோர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் புவனேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அதேபோல் தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வினோத் குமாரின் உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலை மற்றும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆசைக்கு இணங்க மறுத்த திருநங்கைக்கு கத்திக்குத்து - குற்றவாளிகள் கைது