திருச்சி: கடந்த 10 ஆண்டு காலங்களாக, திருச்சி மாநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போதை மருந்துகள், மாத்திரை விற்ற 7 பேரைத் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகரில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளில், சமூக விரோதிகள் சிலர் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் விற்பதாக, திருச்சி மாநகர காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
தனிப்படை காவல்துறை
மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்படி, அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர், மாநகரப் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, மத்தியப் பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், பாலக்கரை, அரியமங்கலம் போன்ற பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமலும், மருத்துவரின் ஆலோசனை கடிதம் இல்லாமலும், சட்டவிரோதமாக போதை மாத்திரைகள், ஊசிகள் விற்பனை செய்வதைக் கண்டுபிடித்தனர்.
1,250 போதை மாத்திரைகள் பறிமுதல்
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட தனிப்படை காவல் துறையினர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அரவிந்த்(32), காட்டூரைச் சேர்ந்த ஷெப்ரின்(27), ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் அவர்கள் வைத்திருந்த 1,250 போதை மாத்திரைகள் மற்றும் 80 போதை மருந்து பாட்டில்களைக் கைப்பற்றினர்.
அதே போல், முடுக்குப்பட்டி மற்றும் கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த நாகராஜ், கார்த்திக் ராஜா, ஜெயராமன், கோகுல், பிரவீன்ராஜ் ஐந்து பேரைக் கைது செய்த தனிப்படை காவல்துறையினர், அவர்கள் வைத்திருந்த 200 போதை மாத்திரைகளையும் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: ஹிஜாப் விவகாரம்: நாடாளுமன்றம் முற்றுகையிடப்படும் என இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை!