திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க கோரி அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து ஏழாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக, அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், விவசாய சங்கங்கள் என பல்வேறு அமைப்புகள் கூடிய அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தொடர் காத்திருப்பு போராட்ட பந்தலில் நடைபெற்றது.
திருப்பூர் உப்பாறு விவசாய பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல கட்சிகளின் தலைமை பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் உப்பாறு அணையில் தண்ணீர் திறக்க கோரி அரசுக்கு கோரிக்கை வலியுறுத்தி கலந்துகொண்டனர். இக் கூட்டத்தின் முடிவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், தாராபுரம் உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பிரதான வாய்க்காலில் அரசூர் ஷட்டரில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக பரம்பிக்குளம்-ஆழியாறு பகுதிகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது.
ஆதலால் திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி வாய்க்காலில் மூலம் அரசூர் ஷட்டர் வழியாக உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட்டு அணையின் முழு கொள்ளளவை நிரப்பி தரவேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: முடங்கிய தளங்களை அரை மணிநேரத்தில் தூக்கி நிறுத்திய கூகுள்!