சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.
இந்நிலையில் திருப்பூர் காங்கேயம் சாலையில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நாளை நடைபெறுகிறது. இதனையடுத்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரை வரவேற்கும் விதமாக திருப்பூர் - காங்கேயம் சாலையில் தேமுதிக சார்பில் பொது மக்களுக்கு இடையூறாக பேனர்களும், கொடி கம்பங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருந்த தேமுதிக கட்சி பேனர்களையும், கொடி கம்பங்களையும், அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது , சம்பவ இடத்திற்கு வந்த தேமுதிகவினர் , பேனர்களையும், கம்பங்களையும் அகற்றக்கூடாது என மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.