திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகேயுள்ள நியூ திருப்பூரிலுள்ள நேதாஜி அப்பேரல் பார்க்கில் 50-க்கும் மேற்பட்ட ஏற்றுமதி பனியன் நிறுவனங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால், பனியன் நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. இதனால், வேலை இல்லாத வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாங்களாகவே பணம் செலுத்தி, தங்கள் ஊருக்குச் செல்ல முடிவு செய்தனர். இதனையடுத்து பெருமாநல்லூர் காவல்துறையினர் சார்பில், அவர்களுக்கு தனியார் பேருந்துகள்ஏற்பாடு செய்து தரப்பட்டது. மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திஷாமிட்டல் ஆன்லைன் மூலம் சிறப்பு பயண அட்டையையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று மாலை நான்கு மணியளவில், 2 பேருந்துகளில் 60 வடமாநிலத் தொழிலாளர்கள் பிகார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெருமாநல்லூர் காவல் துறை ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான காவல் துறையினர் அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:
புலம்பெயர்ந்த தொழிலாளர் போராட்டத்திற்கு அரசே காரணம் - திருப்பூர் எம்.பி.