தூத்துக்குடி: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.
கடந்த 6ஆம் தேதி சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் அன்னை தமிழிலில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக 47 கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் முன்னதாகத் தொடங்கியது.
கரோனா தடுப்பு நடவடிக்கை
அதன்படி, கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி முன்னிலையில் தெய்வத்தமிழ் பேரவை நிர்வாகிகளுக்கு முதலில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது. கோயில் அர்ச்சகர்கள் கிருஷ்ணமூர்த்தி தீட்ஷிதர், தேவராஜன் ஆகியோர் தமிழில் அர்ச்சனை செய்தனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கேளிக்கை பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், கடல், நாழிகிணறு தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடவும் அனுமதி வழங்கப்படவில்லை.
பக்தர்கள் மகிழ்ச்சி
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலானது கடற்கரைப் பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடி பின்னரே சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் கடலில் புனித நீராட அனுமதியில்லை என்பதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் (ஆக.23) தமிழ்நாடு அரசு அறிவித்த தளர்வுகளில் கடற்கரை, திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து நான்கு மாதங்களுக்குப் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு கடலில் நீராட அனுமதி வழங்கப்பட்டது. இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: கோயில் நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற தடை!