தூத்துக்குடி மாவட்டத்தில் பெயிண்ட் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பெயிண்ட் விற்பனை செய்யும் நிறுவனங்கள் கார்ப்பரேட் மூலம் வேலை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சிதம்பரநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பெயிண்ட் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனங்கள், பெயிண்ட் தயாரித்து விற்பனை செய்வது மட்டுமில்லாமல் தற்போது வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் பணிகளையும் செய்து வருகிறது.
இதனால், பெயிண்ட் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் பெயிண்ட் அடிக்கும் வேலைகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், கைகளில் பதாகைகளை ஏந்தி நூற்றுக்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெயிண்ட் தயாரிப்பு நிறுவனங்களை எச்சரித்து ஆர்ப்பாட்டம்
இது குறித்து பெயிண்ட் தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தனியார் பெயிண்ட் நிர்வாகம் பெயிண்டிங் தொழிலலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கின்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இதனால் இன்றைக்கு பெயிண்ட் அடிக்கும் தொழிலாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பாக அனைத்து தொழிலாளர்களும் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து பெயிண்டிங் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்யும் நடைமுறைகளை பெயிண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
இதுபோன்ற செயல்களில் பெயிண்ட் நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டால் தூத்துக்குடியில் பெயிண்டிங் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பத்திரிகையாளர் தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!