ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 7 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ ஆட்சியில் இருப்பவர்கள் கொள்ளையடித்து கொண்டிருப்பதாக கமலஹாசன் பேசுவது, சினிமாவுக்கு வேண்டுமானால் கதை, திரைக்கதை போல் பொருத்தமாக இருக்கும். அரசியல் கட்சி தலைவராக வந்துவிட்டதால் எதையும் ஆதாரத்துடன் அவர் பேச வேண்டும்.
படம் திரையிடுவது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இருவரும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். திரையரங்கங்கள் திறக்கப்பட்டவுடன் அரசு வெளியிட்டுள்ள கரோனா விதிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பர். விதிமுறைகளை மீறும் திரையரங்கு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.
இதையும் படிங்க: திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் - கடம்பூர் ராஜு