தூத்துக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் அருகே முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட வாகன காப்பகம் ரூ.15 லட்சம் செலவிலும், ரூ.3 லட்சம் செலவில் குரூஸ் பெர்னாண்டஸ் சிலை மற்றும் விவிடி சிக்னல் அம்மா உணவகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரத்தை திறந்துவைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமை தாங்கி வாகன காப்பகம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் அனைத்துமே வெளிப்படையாக மக்களுக்கு தெரியும் வகையில் நடைபெற்றுவருகிறது. எதிர்க்கட்சித் தலைவரைபோல் மறைமுகமாக செய்யவில்லை.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும்கூட வெளிநாட்டுக்குச் செல்வதானால் அவருடைய பயணத்தை அரசுக்கு முறையாக தெரிவிக்க வேண்டும். ஆனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபொழுதும் அவருடைய வெளிநாட்டுப் பயண விவரங்களை அரசுக்கு தெரிவிக்காமலேயே சென்றுவருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் விரைவில் ஆன்லைன்படுத்தப்படும். முதற்கட்டமாக மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முறை அமல்படுத்தப்படும்.
பின்னர் படிப்படியாக தமிழ்நாட்டில் உள்ள 1000 திரையரங்குகளிலும் ஆன்லைன் முறையில் டிக்கெட் புக்கிங் செய்யப்படும் முறை கொண்டுவரப்படும். இதற்கு தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் இசைவு தெரிவித்துள்ளது. ஆகவே இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.