தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே விளாத்திக்குளத்தில் தொகுதிக்கு உட்பட்ட விளாத்திக்குளம், புதூர், எட்டயபுரம், பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் கனிமொழி எம்.பி., தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்,விளாத்திக்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்துகொண்டு முன்னிலை வகித்தனர்.
மீனவர்களுக்கு நியாயம்
இதனைத் தொடர்ந்து கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மக்களுக்கான திட்டங்களை அதிமுக போடவில்லை. மக்கள் பணத்தினை அவர்கள் வீட்டிற்குக் கொண்டு போகத் தான் திட்டம் போட்டார்கள். தமிழ்நாட்டு மீனவர்களுக்கான நியாயத்தினை மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி பெற்றுத் தர வேண்டும்.
9 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக வெற்றிகளைக் கொடுத்து திமுக ஆட்சிக்கு மக்கள் நற்சான்று வழங்கியுள்ளனர்.
தற்பொழுது நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக அரசு, சிறப்பாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறது என்பதனை அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மக்கள் உணர்த்துவார்கள்' என்று கூறினார்.
மக்களுக்கான திட்டமில்லை
'மக்கள் பணி சரியாகச் செய்யவில்லை என்பதால் தான், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக இருந்து பரப்புரை செய்கிறார். அதிமுக ஆட்சிக்காலத்தில் எவ்வித திட்டங்களும் போடவில்லை.
மக்கள் பணத்தினை அவர்கள் வீட்டிற்கு (அதிமுக) எடுத்துச்செல்வதற்கு திட்டம்போட்டு செயல்பட்டனர்.
நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்குத் தர வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. ஆளுநர் கையெழுத்துப்போடாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுவதாக இருக்கிறது.
நீட் பிரச்னையில் தமிழ்நாட்டில் முழுமையான வெற்றி பெற வேண்டும். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்வார்' என்றார், கனிமொழி எம்.பி.
இதையும் படிங்க: கருணாநிதி முன்பு கனிமொழி சொன்ன உள்ளாட்சித் தேர்தலுக்கான வெற்றி ஃபார்முலா