தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கவும், கற்றால் இடைநிற்றலைத் தவிர்க்கவும் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(செப்.15) தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, தூத்துக்குடி, டுவிபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் உணவினை பரிமாறி தொடக்கி வைத்தனர்.
பின்னர், எம்பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ ஆகியோர் மாணவ, மாணவிகளுடன் தரையில் அமர்ந்து உணவு உட்கொண்டனர்.
இதில், தூத்துக்குடி டுவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சாமுவேல் புரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி, சி. வ மாநகராட்சி துவக்கப்பள்ளி, ஜே எஸ் நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, முடுக்கு காடு, அரசு ஆதார தொடக்கப்பள்ளி, சங்கர பேரி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீர நாயக்க தட்டு ஆகிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: புதிய உழவர் சந்தை அடிக்கல் நாட்டு விழா