வாசல்:
கடந்த 2019ஆம் ஆண்டு திருநெல்வேலியிலிருந்து தென்காசி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட பின்னர், திருநெல்வேலி மாவட்டம், ஒரு மக்களவைத் தொகுதியையும், திருநெல்வேலி, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம் என, ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.
தொகுதிகள் வலம்:
திருநெல்வேலி : மாநகராட்சியின் சில வார்டுகளும், பேரூராட்சிகள், ஊராட்சிகளை உள்ளடக்கியத் தொகுதியாக இருக்கிறது திருநெல்வேலி. தாமிரபரணி பாசன கிராமங்கள் பலவற்றை உள்ளடக்கியதால், தொகுதியின் பிரதான தொழில் விவசாயம். முப்போகம் விளைந்த நிலையில், தற்போது கார், பிசான சாகுபடிகள் மட்டுமே நடைபெறுகின்றன. இதனால் மழைக் காலங்களில் உபரி நீரை தேக்கி வைக்கப் புதிய தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தொழில் வளர்ச்சியில் இன்னும் பின் தங்கியே இருக்கின்றது திருநெல்வேலி தொகுதி. தொழில் வாய்ப்புகளுக்காகக் கங்கை கொண்டானில் உருவாக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில், 10க்கும் குறைவான நிறுவனங்களே இயங்கி வருவது இளைஞர்களின் கனவுகளைப் பொய்யாக்கியுள்ளது.
இந்தத் தொகுதியின் பிரதான பிரச்னையாக இருப்பது சாலை வசதியின்மை. மாவட்ட தலைநகரிலிருந்து நகரத்தின் ஊடாகச் செல்லும் சாலை நிரந்தரமாக குண்டும், குழியுமாகவே காட்சியளிப்பது தொடர் கதையாக நீள்கிறது.
நகரத்தின் மத்தியில் பாசன குளமாக இருக்கும் நயினார் குளத்தில் கழிவுகள் கலப்பதைக் கட்டுப்படுத்த படகு குழாம் அமைக்க பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாதது ஏமாற்றமாகவே தொடர்கிறது.
அம்பாசமுத்திரம்: மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தொடங்கி சமவெளி வரை நீண்டு கிடக்கிறது இந்த தொகுதி. நிலமெல்லாம் பச்சைப் போர்த்திய மருத நிலங்கள் விரிந்து கிடப்பதால், பாரதி ராஜா தொடங்கி, பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் வரையிலான இயக்குநர்களின் கிராமங்கள் சார்ந்தப் படங்களில் தவறாமல் இடம் பிடித்து விடுகின்றன அம்பாசமுத்திரம் சுற்று வட்டார கிராமங்கள்.
மணிமுத்தாறு அணையும், தாமிரபரணி பாசனமும் விவசாயத்தை வளங்கொழிக்க வைத்தாலும், காட்டு உயிர்களால் விவசாயப் பயிர்கள் சேதமடைவது தவிர்க்கப்பட வேண்டும், காட்டு உயிர் வருகையை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.தனது பிரத்யேகத் தயாரிப்புக்காக தேசிய, மாநில விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற பத்தமடை கோரை பாய் தொழில் நலிவடைந்து வருகிறது. பாரம்பரியம் கொண்ட இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பாய் உற்பத்தியாளர்கள், தொழிலை விரிவுப்படுத்த வங்கிகளில் கடன் வழங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வர்த்தக மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இருக்கிறது.
இத்தொகுதியில் நலிவடைந்து வரும் மற்றொரு தொழில் காருகுறிச்சி மண்பாண்டங்கள்.பாண்டங்கள் செய்வதற்கான மூலப்பொருள் தடையில்லாமல் கிடைப்பதற்கு வழிவகை செய்வதோடு, பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் மண்பாண்ட தொழில் பயிற்சி மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்கின்றனர் மண்பாண்ட தொழிலாளர்கள்.
பாளையங்கோட்டை: தாமிரபரணி நதிக்கரையில் இருக்கும் இரட்டை நகரங்களில் ஒன்று பாளையங்கோட்டை. மருத நிலங்கள் நிறைந்த நெல்லை மாவட்டத்தில் கிராமங்களே இல்லாத தொகுதியாகப் பாளையங்கோட்டை விளங்குகிறது.
தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் அதிகம். தொகுதியின் மையப்பகுதியாக விளங்கும் மேலப்பாளையம் இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பகுதி; இங்குள்ள பெண்களின் முக்கியத் தொழில் பீடி சுற்றுவது.அரசு அலுவலர்கள் முதல் கூலித் தொழிலாளி வரை கலவையான வாக்காளர்கள் இருக்கும் இத்தொகுதியின் முக்கியப் பிரச்னை முறையான கழிவுநீர் மேலாண்மையின்மை. சரியான திட்டமிடல் இல்லாததால் நீர்நிலைகள், தெருக்களில் கழிவு நீர் தேங்கும் நிலை உள்ளது.
அதே போல தொகுதியின் முக்கியப் பகுதிகளில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாகச் சொல்லப்படுகிறது. நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை அருகேயுள்ள பகுதியில் ஏற்படும் போக்குவரத்து இடையூரைத் தவிர்க்க, அந்தப் பகுதியில் மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பதும், தொகுதி மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கையாகும். தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் மேலப்பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவு செய்யப்படாது தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருக்குப் பெரும் பின்னடைவு.
நாங்குநேரி: விவசாய நிலங்களை அதிகம் கொண்ட நாங்குநேரியில் வாழை விவசாயம் அதிமாக நடைபெறுகிறது. இச்சமவெளிப் பகுதியில் விளையும் வாழை மலையாள தேசத்திற்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மரபுத் தொழிலை நம்பியுள்ள இத்தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நேரடி அரசு நெல், வாழை கொள்முதல் நிலையங்கள். விவசாயிகளின் இந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
நாட்டின் முதல் நதிநீர் இணைப்புத் திட்டமான தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு திட்டம் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதிகள் மட்டும் உயர்ந்து கொண்டே போக திட்டம் முதல் நிலையைக் கூட இன்னும் தாண்டவில்லை. தொகுதியில் மாற்றுத் தொழில் வாய்ப்புகள் இல்லாததாலும், கடந்த 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டும், இன்று வரை முழுமையடையாததால் வேலைக்காக இளைஞர்கள் புலம்பெயரும் அவலம் தொடர்ந்து வருகிறது. தண்ணீர் இல்லாததால் தவித்து வரும் விவசாயிகள், காட்டுயிர்களின் பிரச்னைகளாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வெள்ள நீர் கால்வாய் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், நாங்குநேரியில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இத்தொகுதியில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையாக உள்ளது.
ராதாபுரம் : இலக்கியங்களில் பாடப்படும் ஐவகை நிலங்களும் அடங்கியத் தொகுதி ராதாபுரம். தொகுதியின் முக்கிய தொழில் விவசாயமும், மீன்பிடிப்பும். செங்கல் சூளை தொழிலும், குடிசை தொழில்களும் நடைபெறுகின்றன. இத்தொகுதிக்குட்பட்ட கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டத்தின் போது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்வேண்டும் என, அப்பகுதி மக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த வழக்குகளால் அப்பகுதிமக்கள் அரசு வேலைக்குச் செல்லமுடியாத நிலை இருக்கிறது. திசையன்விளை, உவரி, இடிந்தகரை ஆகிய கடற்கரைப் பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும், தொடங்கப்பட்டு நான்காண்டுகளாகியும் முடிக்கப்படாத வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதை உடனடியாக முடிக்க வேண்டும், மணிமுத்தாறு அணையில் இருந்து வரும் தண்ணீர் ராதாபுரம் தொகுதியின் கடைமடை குளங்களுக்கு வர ஏற்பாடு செய்யவேண்டும் என்பன தொகுதியின் முக்கியப் பிரச்னையாக இருக்கின்றன.
களநிலவரம்:
மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளில் இரட்டை நகரங்களைத் தவிர மற்ற மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளன. வெள்ளாளர்களின் வாக்கு வங்கியால் தொகுதியை தக்கவைத்து வந்த திமுக, ஏ.எல்.எஸ். லட்சுமணனின் செயல்பாடின்மையால் அந்த வாய்ப்பை இழக்கலாம்.
அதிமுக போட்டியிடும் பட்சத்தில் வெற்றி பெரும் வாய்ப்புகள் இருந்தாலும், பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரனின் தொகுதி என்பதால், திருநெல்வேலித் தொகுதி பாஜகவுக்கு விட்டுத் தரப்படலாம். சிறுபான்மையினர் வாக்கு வங்கிகள் காரணமாக, பாளையங்கோட்டை தொகுதி திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவேக் கருத வாய்ப்புண்டு.
அம்பாசமுத்திரம் தொகுதியில், அதிமுகவின் முருகையா பாண்டியனின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும், அங்குத் திமுகவும் சரிசமமான போட்டியைத் தரக்கூடும். ராதாபுரம் தொகுதியில் அதிமுகவின் இன்பத்துரையின் வெற்றியை எதிர்த்து திமுகவின் முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.இந்த முறையும் இருவருக்கும் வாய்ப்புகள் சமஅளவில் உள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுவிடம், தனது தொகுதியை இழந்த காங்கிரஸ், இம்முறை மீண்டும் அதை வெல்லும் முனைப்பில் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது.