விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே வீரச் செல்லையாபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல விடாமல், சிவகாசியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று வண்டி பாதையை ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் பலமுறை மனு அளித்த பின்னர் விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அந்த ஆய்வில், தனியார் நிறுவனம் அந்த பகுதியில் உள்ள வண்டி பாதையை ஆக்கிரமித்து இருப்பது உண்மை என வருவாய் வட்டாட்சியர் ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தற்போது வரை அந்த ஆய்வு அறிக்கை மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தனியார் நிறுவனத்திற்கு சார்பாக செயல்படுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: "ரஜினி-சீமான் சந்திப்பின் பின்னணி என்ன?"- மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் கருத்து!
மேலும், இன்று நடந்த விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில், தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தின் போது விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை ராஜினாமா செய்யச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்று இருக்கையில் அமர்ந்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து குறைதீர் கூட்டத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அமைதியாக நடைபெற்றது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்