திருநெல்வேலி: டவுன் சாலியர் தெருவில் உள்ள வீடு ஒன்றில் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை ஒன்று இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திருநெல்வேலி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி, ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் அடங்கிய குழுவினர் டவுன் சாலியர் தெருவில் உள்ள கோவிந்தன் என்பவருடைய வீட்டில் சோதனையிட்டனர்.
அப்போது பூஜை அறையில் இருந்த ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலையை மீட்டனர். இதன் பின்னர் கண்டிகைபேரி கிராம நிர்வாக அலுவலர் மகாராஜன் முன்னிலையில் சிலையை காவல் துறையினரிடம் கோவிந்தன் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து சிலையை மீட்ட காவல் துறையினர் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலை இரண்டு அடி உயரமும் 11 கிலோ எடையும் கொண்டதாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த சிலை:
இந்தச் சிலை பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் வரலாற்று ஆய்வாளர்களும் சிலை மதிப்பீட்டாளர்களும் நேரில் வந்து பார்த்த பிறகுதான் சிலையின் உண்மையான மதிப்பு தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில் இந்த சிலை எப்படி கோவிந்தனுக்கு கிடைத்தது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் 1990ஆம் ஆண்டு இந்த சிலையை தனது அக்காவின் மாப்பிள்ளை தன்னிடம் கொடுத்ததாகவும், அது குறித்து வேறு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விவாதமின்றி அரசு பொது இன்சூரன்ஸ் தனியார்மய சட்ட திருத்தம் - சு. வெங்கடேசன் எம். பி கண்டனம்