திருநெல்வேலி: வேலூரை தொடர்ந்து நெல்லையிலும் ஒரு அலட்சிய சம்பவம் நிகழ்ந்துள்ளது, சாலை நடுவே மின்கம்பத்துடன் சேர்த்து புதிய தார் சாலை போட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 8 ஆம் தேதி நெல்லையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தருகிறார். இதனை முன்னிட்டு நெல்லை மாநகரில் கடந்த 10 ஆண்டுகளாக குண்டு குழியுமாக காட்சியளிக்கப்பட்ட மாநகர சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் செப்பனிட்டு அவசர அவசரமாக புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
முதலமைச்சர் வருகைக்கான நாட்கள் குறைவாக இருப்பதால் சாலைகள் செப்பனிடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் செல்லக்கூடிய பிரதான சாலையில் சாலை நடுவே உள்ள மின்கம்பத்தை முறையாக அகற்றாமல் சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று உள்ளது.
இதன் காரணமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உள்ள இந்த பிரதான சாலை எந்நேரமும் விபத்து ஏற்படலாம் என்ற அச்ச சூழலை உருவாக்கி உள்ளது. சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை சுற்றிலும் தார் கற்களை போட்டு மூடியுள்ளதால் சாலையில் ஒரு பகுதியாக மின்கம்பம் இருப்பது போல் காட்சியளிக்கிறது.
மாலை மற்றும் இரவு வேலைகளில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் இந்த வழியாக கடந்து செல்லும் அந்த நேரத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடந்ததை அறியாமல் வரக்கூடிய வெளியூர் வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களும் மின்கம்பத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடனடியாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியத்துறை அலுவலர்கள் மின்கம்பத்தை அகற்றி சாலையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ”முதலமைச்சர் வருகையினால் தான் இந்த சாலை தற்போது செப்பனிடப்படுகிறது.
எனவே முதலமைச்சர் மற்றும் கவர்னர் அவ்வப்போது நெல்லை மாவட்டத்திற்கு வந்து சென்றால் நீண்ட நாட்களாக பராமரிப்பிட்டு கிடக்கும் சாலைகள் மீண்டும் புதுமை அடையும். அது மக்களுக்கும் போக்குவரத்திற்கான சிறந்த வசதியை ஏற்படுத்தும். எனவே இதற்காகவும் முதலமைச்சருக்கு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்” என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே வேலூரில் இதுபோன்று புதிய சாலை அமைக்கும் பணியின்போது சாலை நடுவே இருந்த அடிபம்பை அகற்றாமல் சாலை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வில்பட்டி பிரதான சாலை பணியை தரமான முறையில் அமைக்க மக்கள் கோரிக்கை