திருநெல்வேலி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் இன்று (செப். 8) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவரும் நெல்லை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் பேசுகையில்,
“எதிர் கட்சி என்று கூட பாராமல் நெல்லை தொகுதிக்கு ஒரு கலை கல்லூரியை முதலமைச்சர் தந்தார் அதற்கு நன்றி. பொதுவாக முதலமைச்சர்கள் சரித்திரத்தில் இடம் பிடிப்பதற்காக எதையாவது செய்வார்கள், ஸ்டாலின் நெல்லையில் சரித்திரம் படைக்கும் வகையில் ஒரு திட்டத்தை செய்ய வேண்டும் என எனக்கு ஒரு ஆசை.
அதன்படி மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகள் இரண்டையும் ஒன்றாக இணைத்து விட்டால் எங்கள் மக்களுக்கு எல்லா நேரமும் தண்ணீர் கிடைத்து விடும் இது மத்திய அரசு திட்டமாக இருந்தாலும் மாநில அரசு முயற்சித்தால் நடக்கும் என்தால் அன்போடு இந்த கோரிக்கை வைக்கிறேன்.
இங்கு சைவமும் வைணமும் தலைத்தோங்கியுள்ளது இங்குள்ள மானூர் குளம் மிக பெரியது எனவே முதல்மைச்சர் பார்வையிட்டு அந்த குளத்துக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும்.
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய இரண்டு ஆண்டு முன்பே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, இங்கு ஆறு மருத்துவர் இருக்க வேண்டும் ஆனால் 3 பேர் தான் உள்ளனர். இன்னும் 3 மருத்துவர்கள் இருந்தால் இங்கேயே இருதய அறுவை சிகிச்சை செய்ய முடியும் எனவே அதற்கும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீங்கள் வந்தால் சாலைகள் எல்லாம் புதிதாக போடுகிறார்கள் எனவே நீங்கள் அடிக்கடி வர வேண்டும் அப்போது தான் மக்களுக்கு நல்ல சாலைகள் கிடைக்கும்” என்று தெரிவித்தார்
நெல்லை மாநகர் முழுவதும் பல மாதங்களாக சாலைகள் படுமோசமாக உள்ள நிலையில் முதலமைச்சர் வருகைக்காக பாளையங்கோட்டை மற்றும் சமாதானபுரத்தில் மட்டும் சாலைகள் அவசர அவசரமாக புதிதாக போடப்பட்டன.
இதை கவனித்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், நாம் பல மாதங்களாக தரமில்லாத சாலையில் இன்னல்களை சந்தித்து வருகிறோம் ஆனால் முதலமைச்சருக்காக ஒரே நாளில் புதிதாக சாலை போடுகிறார்களே என்று முனுமுனத்து வந்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் பங்கேற்ற விழா மேடையில் சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நேரடியாக முதல்வரை பார்த்து உங்கள் வருகையால் தான் சாலைகள் போடப்படுகிறது என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நெல்லையில் ரூ.7 கோடியில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு