திருநெல்வேலி: ராதாபுரம் அருகே உள்ள கிராமத்தில் இயங்கி வந்த காற்றாலையில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வள்ளியூர், ராதாபுரம் சுற்றுவட்டாரப்பகுதியில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டு காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நெல்லையில் கடந்த மூன்று மாதங்களாக தென்மேற்கு பருவக்காற்று சீசன் என்பதால் காற்றாலைகள் முழு நேரமும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ராதாபுரம் அருகே உள்ள கோலியாங்குளம் என்ற கிராமத்தில் இயங்கி வந்த காற்றாலை ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் காற்றாடியின் மூன்று இறக்கைகளின் மையப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிவதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மேலும் அருகில் குடியிருப்புப்பகுதி அமைந்துள்ளதால் இறக்கைகள் எரிந்து கீழே விழும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்களும் அச்சமடைந்துள்ளனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த வள்ளியூர் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். இருப்பினும் காற்று பலமாக வீசுவதால் தீயின் வேகமும் அதிகரித்துள்ளது.
முதல் கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட காற்றாலை ராஜபாளையத்தைச்சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும்; தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்கசிவு ஏற்பட்டு அதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு ராதாபுரம் பகுதியில் இது போன்ற காற்றாலை ஒன்று தீ விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இதுபோன்று காற்றாலைகளில் தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தெலங்கானாவில் பெரும் தீ விபத்து... 8 பேர் உயிரிழப்பு... பிரதமர் நிவாரணம் அறிவிப்பு...