திருநெல்வேலி: திருமால் நகரை சேர்ந்தவர் ஹரிகரன் (22). இவர் தனது நண்பர்களான கேடிசி நகரை சேர்ந்த ஜோசு செல்வராஜ் (29), சாந்தி நகரை சேர்ந்த ப்ரீத்தம் (23), பெருமாள்புரத்தை சேர்ந்த சிவக்குமார் (22) மற்றும் செல்வகுமார் (22) ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் (ஏப்ரல் 9) சாந்தி நகரில் உள்ள ப்ரீத்தம் வீட்டின் மொட்டை மாடியில் வைத்து மது அருந்தியுள்ளார்.
பின்னர் செல்வராஜூக்கும் ஹரிகரனுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையின் உச்சத்தில் இருந்த செல்வராஜ் ஹரிகரனின் சட்டையை பிடித்து இழுத்துள்ளார். அப்போது ஹரிகரன் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே நான்கு பேரும் ஹரிகரனை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.
இது குறித்து நான்கு பேரிடம் மருத்துவர்கள் கேட்டபோது, ஹரிகரன் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் சிகிச்சை பலனளிக்காமல் ஹரிகரன் உயிரிழந்தார். பின்னர் மருத்துவமனை சார்பில் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து நான்கு பேரிடமும் காவல் துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் மதுபோதையில் ஹரிகரனை கீழே தள்ளிவிட்டதாகவும் கொலை செய்யும் நோக்கில் தள்ளிவிடவில்லை என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். பின்னர் காவல் துறையினர் நான்கு பேரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் கைதான கனிமவளத் துறை அலுவலர் அரசு மருத்துவமனையில் அனுமதி