தென்காசி: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்பு தொடர்பாக இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிக இளைஞர்கள் ஆர்வம் காட்டினர். அந்த வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நூற்றுக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் போட்டியிட்டனர்.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று (அக். 12) அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில், தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத்தில் பொறியியல் பட்டதாரியான இளம்பெண் ஒருவர், தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பரப்புரையின்போதே அதிக வரவேற்பு
அதாவது, வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத்திற்குள்பட்ட லட்சுமியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிசுப்ரமணியன் - சாந்தி தம்பதியின் மகள் ஸாருகலா (23). இவர் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு படித்துவருகிறார்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் தனது தந்தையின் ஆலோசனையின்பேரில் வெங்கடாம்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஸாருகலா பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டார். பரப்புரையின்போதே அவருக்கு ஊர் பொதுமக்கள் அதிக வரவேற்பு கொடுத்தனர்.
வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று பிற்பகலில் எண்ணப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே ஸாருகலா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துவந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஸாருகலா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம், தென்காசி மாவட்டத்தில் 23 வயது இளம் பொறியியல் பட்டதாரி ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிபெற்ற ஸாருகலாவுக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தினர் மாலை அணிவித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.