சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சதாசிவபுரத்தில் தனியார் சேகோ ஆலை இயங்கி வருகிறது. அங்கு அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கார்த்தி என்ற தொழிலாளி, சேகோ ஆலை கழிவுகளில் லிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் தொட்டி அருகே வால்வு ஒன்றினை இயக்க முற்பட்டுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்தத் தொட்டியில் கார்த்தி (23) தவறி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மற்றொரு தொழிலாளியான ஆறுமுகம் (45) என்பவர், அவரை காப்பாற்ற முற்பட்டபோது அவரும் தவறி விழுந்துள்ளார். ஆலை கழிவு தொட்டியில் மாட்டிக்கொண்ட இருவரும், விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒரே நேரத்தில் 2 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த ஆத்தூர் காவல் துறையினர் , சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.