சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த தறித்தொழிலாளி முத்துக்குமாரின் மகள் பிரியதர்ஷினி. இவர், 2018ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார். அதைத் தொடர்ந்து, அதே ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 89 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார்.
இருந்தபோதும், மனம் தளராமல் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற மாணவி பிரியதர்ஷினி, 209 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். ஆனால், கடந்த ஆண்டும் அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் தனது முயற்சியை கைவிடாத பிரியதர்ஷினி, இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வையும் எழுதி, 330 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
ஆனாலும், அரசு மருத்துவக் கல்லூரியில் பிரியதர்ஷினிக்கு இடம் கிடைக்கவில்லை.
இதனிடையே, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அரசு உதவிப் பெறும் பள்ளியில் பிரியதர்ஷினி பயின்றதால், இந்த இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை.
தொடர்ந்து மூன்று ஆண்டுகள் காத்திருந்தும் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியதர்ஷினி, தனது பெற்றோருடன் சேலம் ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது, மருத்துவப் படிப்பில் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களையும் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார்.