சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், பாஜக நெசவாளர் அணி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்தத் தலைவர் எச்.ராஜா,"தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும் முதலமைச்சராக முடியாது. திமுக ஆட்சிக்கு வர தமிழக மக்கள் விரும்பவில்லை. அவர்கள் வந்தால் ரவுடியிசம், நில அபகரிப்புகள் அதிகரிக்கும் என மக்கள் அஞ்சுகின்றனர்.
திமுக ஒரு ஊழல் கட்சி என, தந்தை பெரியார் 1962 ஆம் ஆண்டிலேயே குறிப்பிட்டிருக்கிறார். அனைத்து மட்டங்களிலும் ஊழல் செய்யும் கட்சியாக திமுக உள்ளது. அதில் உச்சம் தான் 2ஜி ஊழல். அந்த ஊழலில் ஈடுபட்ட இருவரும் என்ன ஆவார்கள் என்று மார்ச் 15 ஆம் தேதி தெரிய வரும். அப்போது தமிழகத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் காலியாகும்.
மத்திய அரசின் சட்டங்களால் விவசாயிகள் யாரும் பாதிக்கப்படவில்லை. மூன்று மாநில விவசாயிகள் மட்டுமே போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து டெல்லி போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்கவில்லை. எட்டு வழிச்சாலை திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு ஒரு சிலரைத் தவிர அனைத்து விவசாயிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுகவும் பாஜகவும் இணைந்து செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எனது பார்வையில் 100% மதிப்பெண் வழங்குகிறேன். அமமுக தனிக் கட்சி. அந்தக் கட்சியினர் அவர்கள் பாதையில் செல்கின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: ’பழனிசாமி- சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடக்காது’: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்