தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மக்களவைத் தொகுதியை, கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல் திமுக தானே வம்படியாக களமிறங்கியுள்ளது. இதன் மூலம் சரியான போட்டி வேட்பாளரை அதிமுகவுக்கு எதிராக களமிறக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு சேலத்தை திமுக தள்ளிவிடும் என பலரும் முணுமுணுத்துவந்த நிலையில், சேலம் அஸ்திரத்தை திமுக கையில் எடுத்தது. குறிப்பாக, முன்னாள் அமைச்சரும், கருணாநிதியின் படைத் தளபதிகளில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபுவுக்கு பதிலாக, 2016 பொதுத்தேர்தலின்போது தேமுதிகவிலிருந்து திமுகவிற்கு தாவிய எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு சீட் கொடுத்து திமுக பலப்பரீட்சை நடத்துகிறது.
தமிழகத்தின் பிற கட்சிகளை விட உள்குத்துக்கும், உட்கடசிப் பூசலுக்கு பெயர் போன கட்சி திமுக. இப்படி இருக்கையில், எஸ்.ஆர். பார்த்திபனை களமிறக்கியுள்ளார் ஸ்டாலின். அனைத்து தடைகளையும் கடந்து அவர் வெற்றி பெற்றால் மட்டுமே எடப்பாடிக்கு எதிராக தான் வகுத்த வியூகத்தில் ஸ்டாலின் வெற்றிபெற முடியும்.
இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கருமந்துறை மலை கிராமத்தின் வெற்றி விநாயகர் ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு, அங்கிருந்து தன் பரப்புரைத் தொடங்கியுள்ளார்.
இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, திருவாரூரிலிருந்து தன் பரப்புரையைத் தொடங்கிய ஸ்டாலின், மூன்றாவது நாளான இன்று சேலத்தில் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
எதிரும் புதிருமாக முட்டி மோதிக்கொள்ளும் இருபெரும் கட்சிகளின் முகங்களாக பார்க்கப்படும் எடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே நாளில் சேலத்தில் முகாமிட்டிருப்பது அம்மாவட்ட அரசியலில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சேலம் மாநகரமே தேர்தல் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.