சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வீராணம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (57).
இவர் திமுகவின் சேலம் மாவட்ட பிரதிநிதியாகப் பதவி வகித்துவந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், வீராணம் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஆறுமுகம் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார். சில நாள்களில் அவர் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இன்று சிகிச்சைப் பலனளிக்காமல் ஆறுமுகம் பரிதாபமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். கறுப்புப் பூஞ்சை நோய்த் தாக்கி ஊராட்சித் தலைவர் உயிரிழந்த சம்பவம் வீராணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.