சேலம்: நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் இந்தியாவில் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி விடுதலைப் போராட்ட இயக்கங்களின் சார்பில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக தேசிய கைத்தறித் தினம் 2015ஆம் ஆண்டு முதல் சுதந்திர இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று சேலம் நெசவாளர் சேவை மையம் மற்றும் கைத்தறி துணிநூல் துறை இணைந்து சேலத்தில் உள்ள பாரம்பரிய நெசவாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியை நடத்தியது.
முன்னதாக நெசவாளர் மைய வளாகத்தில் கைத்தறி துணி சிறப்பு கண்காட்சி திறக்கப்பட்டது. இதில் காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் உருவம் நெய்யப்பட்ட கைத்தறித் துணிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிகழ்ச்சியில் சேலம் நெசவாளர் சேவை மையத்தின் உதவி இயக்குநர் சந்தோஷ்குமார், துணை இயக்குநர் கார்த்திகேயன், இந்திய கைத்தறி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் அமீன்பாய் ஆகியோர் நெசவாளர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து மரியாதை செய்தனர்.