தமிழர்களின் மிகத் தொன்மையான மரபுக்கலைகளில் ஒன்று பொம்மலாட்டம். மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை வண்ணமிட்டு, அழகுபடுத்தி பின்பு கயிறுகளால் பொம்மைகளை கட்டி ஆட்டி அதற்கு ஏற்றாற்போல் குரல் கொடுத்து கதைகளைச் சொல்வதுதான் இக்கலையின் சிறப்பு. தோல்பாவைக்கூத்து, மரப்பாவைக்கூத்து என்றும் அழைக்கப்பெறும் பொம்மலாட்டக் கலை இன்று தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு என சில மாவட்டங்கள் தவிர வேறெங்குமில்லை.
புராணக்கதைகளும், அரசர்களின் வரலாறுகளும், இக்கலை வழிதான் மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டன. நல்லதங்காள், வள்ளித்திருமணம், அருணகிரிநாதர், சிறுத்தொண்ட நாயனார், பக்த பிரகலாதன், அரிச்சந்திரன் போன்ற கதைகள் பொம்மலாட்டத்தால்தான் உயிர்பெற்றன.
இந்திய விடுதலைப் போராட்டக் காலங்களில்கூட பொம்மலாட்டக்கலைக்கு தனி இடமிருந்தது. அந்தளவிற்கு மக்களிடம் தாக்கத்தையும், செல்வாக்கையும் பெற்றிருந்த பொம்மலாட்டக் கலை இன்று மிகவும் நலிந்துவருகிறது.
நல்ல வருமானம் ஈட்டித்தந்த இக்கலையை இன்று நடத்துவதற்கே ஊருக்கு இரண்டு, மூன்று குழுக்கள்தான் உள்ளன. அந்தவகையில் சேலம் ராமகிருஷ்ணா பொம்மலாட்டக்குழு மட்டும் இன்றும் உயிர்ப்போடு இதை நடத்திவருகின்றனர். அனைவரையும் கவரும் வகையில் வண்ண வண்ண பொம்மைகளை முப்பரிமாண தோற்றத்தில் இவர்கள் அசைத்து, அதற்கு ஏற்றப் பாடலைப் பாடியும், வசனங்கள் பேசியும் பொதுமக்களை மகிழ்விக்கின்றனர்.
ஒரு குழுவிற்கு 12 பேர் தேவைப்படும் இக்கலையை பெரும்பாலும் வயதான கலைஞர்களே நிகழ்த்துகின்றனர். போதிய வருமானமோ, வளர்ச்சியோ இல்லாத இக்கலையில் இளைஞர்கள் ஆர்வம் செலுத்துவதில்லை. 10, 20 நாள்கள் நடந்த பொம்மலாட்டத்தை ஒருநாள் நடத்தவே வழியற்று இருக்கும் இந்த நலிந்தக் கலைஞர்களை மட்டுமின்றி அழிவின் விளிம்பில் இருக்கும் பொம்மலாட்டக் கலையையும் அரசு மீட்டெடுக்க வேண்டுமென்பதே மரபுக்கலை ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
இதையும் படிங்க: முன்னோர்கள் பயன்படுத்திய தமிழ் எண்கள் - மைல் கற்களால் வெளியான தகவல்