சேலம்: அன்னதானப்பட்டி கேட்டுக்காடு பகுதியில் வீட்டில் ஏராளமான எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர்களான மாணிக்கம் மற்றும் அவரது மகன் சங்கர் ஆகியோரிடம் அன்னதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டில் சோதனை நடத்தியதில் ஏராளமான எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் சார்பில் சேலம் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரேணுகா தேவி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர்.
இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில், பிரபல நிறுவனங்களைச் சேர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் மற்றும் காலி சிலிண்டர்களை மாணிக்கம் மற்றும் அவரது மகன் சங்கர் பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ஒரு சிலிண்டரில் இருந்து மற்றொரு சிலிண்டருக்கு எரிவாயுவை மாற்றிக் கொடுப்பதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் அளித்த தகவலின் பெயரில் மாணிக்கம் மற்றும் அவரது மகன் சங்கர் ஆகியோரை அன்னதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 எரிவாயு சிலிண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய எத்தனை எரிவாயு சிலிண்டர்கள் இவர்களுக்கு கிடைத்தது எப்படி...? இவர்களோடு எந்தெந்த முகவர்கள் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: CCTV:கோயம்பேடு மார்க்கெட்டில் பழப்பெட்டிகள் திருடிய நபர்கள்!