மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டில் சேலம், சென்னை, ஒசூர், கோவை, திருச்சி ஆகிய இடங்களில் பாதுகாப்புத் தளவாடப் பொருள்கள் உற்பத்தி நிறுவனம் அமைக்கப்படும் என அறிவித்து அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான இரும்பாலை வளாகத்தில் புதியதாகப் பாதுகாப்புத் தளவாடப் பொருள்கள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்து சேலத்தில் உள்ள முன்னணி நிறுவன உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தலைமையில் நேற்று (நவம்பர் 25) நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில்...
- சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன்
- சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன்
- இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் வேல் கிருஷ்ணா
- தமிழ்நாடு சிறு, குறு தொழில் கூட்டமைப்பின் தலைவர் மாரியப்பன்
- ஏரோஸ்பேஸ் இன்ஜினியர் பிரைவேட் லிமிடெட் மேலாண் இயக்குநர் சுந்தரம்
- சேகோசர்வ் மேலாண் இயக்குநர் கதிரவன்
உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் ஆட்சியர் கார்மேகம் பேசும்போது, "சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு 330 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.
யாரும் பாதிப்படையாத வகையில் இப்பணிகள் விரைவில் முடிவடையும். சேலம் மாவட்டத்தில் டெக்ஸ்டைல் பார்க் (ஜவுளி பூங்கா), உணவுப் பூங்கா, சிட்கோ, சிப்காட் உள்ளிட்ட 53 தொழில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன.
சேலம் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத அரசுக்குச் சொந்தமான 1.25 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் காலியாக உள்ளன. இதனைப் பயன்படுத்தி ஏழை மக்களுக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கும், புதிய தொழிற்சாலைகள் - தொழில் நிறுவனங்கள் அமைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவை உலக நாடுகளில் முதன்மை நாடாக்கிடச் சபதமேற்போம்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்