நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (அக்டோபர் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களில் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே நீட் தேர்வுக்கு முன்பாக மருத்துவப் படிப்புகளுக்குச் சென்றனர். நீட் தேர்வுக்குப் பின் 0.1 விழுக்காட்டினர் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு சென்றதாகத் தெரிவித்தார்.
மேலும், 2018 முதல் 2020ஆம் ஆண்டு வரையில் இரண்டு கல்வி ஆண்டுகளில் அரசுப் பள்ளியில் படித்த 11 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு சென்றுள்ளதாகவும்; அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பேவையில் எப்போது சட்டம் இயற்றப்பட்டது?அந்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதன் நிலை என்ன? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.