மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை விரிவாக்க கட்டடத்தின் எதிரே இயங்கிவரும் அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று வரை 111 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று கூடுதலாக இருவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 113 பேர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில், 54 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 57 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட அல்லது பரிசோதனைக்கு வருகின்ற நோயாளிகளைத் தவிர, அதிக நபர்கள் வருவதை தடுக்க அந்தப் பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதாரத்துறையும், மதுரை மாநகராட்சியும் அறிவித்துள்ளன.
இதனால் அப்பகுதி முழுவதும் காவல்துறையின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.