மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் குறித்து திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தோப்பூர் பகுதியில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது.
தற்போது அங்கு கட்டடப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் செயல்பட்ட தமிழ்நாடு அரசு, திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலத்தை ஒதுக்கி இருந்தது என்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்கிய இந்திய அரசுக்கு நான் நன்றி கூறுகிறேன். தற்போது, அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளை விரைவுபடுத்த சிறப்பு அலுவலரை நியமிக்க வேண்டும், நிலுவையில் உள்ள அனைத்து ஒப்புதல் நடைமுறைகளுக்கும் ஒற்றைச் சாளர முறையில் ஒப்புதல் வழங்கும் வசதியை வகுக்க வேண்டும். மருத்துவமனையின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களுக்கு சுற்றியுள்ள கிராமங்களின் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளிடமிருந்து ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் பெறவும் பரிந்துரைக்கிறேன்.
மேலும், ஜேஐசிஎ (JICA) நிறுவனத்திடமிருந்து கடன் பெற்று தேவையான நடவடிக்கைகள், கட்டுமானத் திட்டம் வெளியிடுவது உள்ளிட்டவற்றை அவசர கால விஷயமாகக் கருதி போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திட்டச் செலவினங்களை காலவரிசை அடிப்படையில் அவ்வப்போது திருத்துவதால், கட்டுமானச் செலவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக திட்டமிடப்படுகிற தேதிகளுக்குள் இந்த நடவடிக்கைகளை விரைந்து நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!